Pages

Friday, May 4, 2012

வட்டார மொழி வழக்கு


ரொம்ப நாளைக்கி அப்புறமா ஒரு பதிவ போடுறதுக்கு இப்போ தான் நேரம் கெடச்சிருக்கு. இதுக்கு முந்தைய பதிவுக்கு கிடைச்ச வரவேற்பு அமோகமா இருந்ததுப்பா. (எத்தன பேரு நம்ம blogல பின்னூட்டம் போட்டுருகாங்கன்னு தெரியுது இல்ல..ஆனா முகபுத்தகத்தில ஓரளவு பரவாயில்ல ன்னு சொல்லுற அளவுக்கு பாராட்டு வந்திருந்தது)..நாமளும் கைததட்டுகு ஏங்குற ஜாதி தானே.

அப்பப்ப இருக்கிற சூடான விஷயங்கள போடணும்னு நினைக்கிற போதெல்லாம் ஏதாவது இடையூறு வந்துரும். இன்னக்கி நான் எழுத நினச்ச விஷயம் போன வருஷம் என் முகபுத்தகத்தில கேட்டிருந்த கேள்வி சம்பந்தமான ஒரு அலசல்.

ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்னன்னு கேட்டிருந்தேன். அதுக்கு நான் கொடுத்திருந்த 3 தெரிவுகள் இவைதான். முதலாவது நம்முடைய வட்டார மொழி வழக்குல பேசுறதுக்கு தயக்கம் காட்டுறது, ரெண்டாவது ஆங்கிலம் கலந்து பேசுறத பெருமையா நினைக்கிறது, மூணாவது தமிழில அந்த குறிப்பிட்ட ஆங்கில வார்தைகுரிய சொல் கொஞ்சம் செயற்கையா உபயோகிக்கிறது கஷ்டமா இருப்பதுன்னு மூணு தெரிவு கொடுத்திருந்தேன். இந்த கேள்விக்கு வந்த பதில்களும் நம்ம போன பதிவுக்கு கெடச்ச மாதிரியே ரொம்ப குறைவாகவே இருந்தது. (கொஸ்டின் கஷ்டமா பாஸ்)

இனி இந்த கேள்விய நான் ஏன் கேட்டேங்குறதுக்கு விளக்கம் கொடுக்கலாம்னு நினைக்கிறேன். நம்ம தமிழில பேச்சு வழக்கு எழுத்து வழக்குன்னு ரெண்டு வகை இருக்கிறது என்ன பொறுத்தவரைக்கும் பெரிய ஒரு விஷயம். சிறப்புன்னு கூட சொல்லலாம். எனக்கு தெரிஞ்சவரைக்கும் வேற மொழிகளில் இந்த அளவுக்கு சிக்கலான, இடத்துக்கு இடம், மாவட்டத்துக்கு மாவட்டம், நாட்டுக்கு நாடு வித்யாசமான பேச்சு வழக்கு இருப்பது தமிழிலயா தான் இருக்கும்.( வேற மொழிகளில் இவ்வளவு வெவ்வேறு பட்ட பேச்சு வழக்கு இருந்தா தயவு செஞ்சு பின்னூட்டத்துல போடுங்க. அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆங்கில உச்சரிப்பு வித்யாசம் கொஞ்சம், கிரிக்கட் போட்டி பாக்குறதனால தெரியும். நம்ம Richie Benaud, David Lloyd பேசும் ஆங்கிலம் செம சுவாரஸ்யமா இருக்கும்)


முதல்ல நம்ம நாட்டுல இருந்தே ஆரம்பிக்கிறேன். இங்கே பேசும்( கதைக்கும், இந்த கதைக்கும் என்கிற வார்த்தை இலங்கையில் தான் இருக்கிறதா நினைக்கிறேன், கவிதாயினி தாமரை புண்ணியத்துல 2 பாட்டுல வருது, கண்டுபிடிங்க (தெனாலி தவிர்த்து)) தமிழ்ல ஒவ்வொரு மாகாண ரீதியா பார்க்கும்போது வித்தியாசம் நல்லாவே தெரியுது. யாழ்ப்பாணத்தில் பேசும் தமிழ், மட்டகளப்பில் பேசும் தமிழ், கொழும்பு தமிழ், மலையக தமிழ், முஸ்லிம்கள் பேசும் தமிழ்( இதில கிழக்கு மாகாணத்து முஸ்லிம்களின் தமிழ், ஏனைய மாகாணத்து முஸ்லிம் மக்கள் பேசுவதிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்கும் இருக்கும்). உச்சரிப்பு, வார்த்தை பிரயோகம், தொனி, சுருதி அது இதுன்னு எல்லாத்துலயும் நீங்க ஒரு வித்தியாசத்த உணர்வீங்க.


அப்டியே தமிழ்நாட்டு பக்கம் போனா, அப்பாடி எவ்வளவு வித்தியாசம் இருக்குது. திருநெல்வேலி,மதுரை,சென்னை,தூத்துக்குடி,கோயம்புத்தூர் அப்படின்னு ஒவ்வொரு பகுதிக்கும் நல்ல வித்யாசம் தெரியிற மாதிரி மொழி வழக்கு இருக்குது. பாலக்காடு, ராயபுரம் இந்த பகுதிகள்ல பேசுற தமிழும் வித்யாசம். ( எனக்கு தெரிஞ்சுது இவ்வளவு தான், தயவு செஞ்சு தென்னிந்திய நண்பர்கள் உதவட்டும்). என்னென்ன வித்யாசம் ஒவ்வொரு மொழிவழக்குலயும் இருக்கிங்கிரத பார்ப்பதை விட நான் சொல்ல போகும் விஷயம் எனக்கு முக்கியமா தோணுது.


இப்போ விஷயத்துக்கு வருவோம். இப்படி ஒவ்வொரு பகுதிலயும் பேசுற தமிழ் வித்தியாசப்பட்டு இருப்பது உண்மையிலேயே ஒரு அழகான விஷயம். அவங்க பேசும் தமிழில அந்த மண்ணுடைய வாசம் வீசும் பாருங்க! அதில இருக்குற சுகமே தனி! ஒரு ஊர்ல அவிங்க இவிங்கன்னா இன்னொரு ஊருல அங்கிட்டு இங்கிட்டு, இன்னும் கொஞ்சம் அங்கனகுள்ளே, அவ்விடதடியில,அவ்விடத்த.இப்படி ஏகப்பட்ட வேறுபாடு. இந்த பல்வகைமைய நாம ரசிக்க பழகனும்குறேன்.


சரி இதுல எங்க ஆங்கில கலப்பு வருதுன்னு பாருங்க. இப்போ ஒரு பிரதேசத்துல வாழுற ஒரு தமிழர் இன்னொரு பகுதிக்கு போனா அவர் தன்னுடைய சொந்த வட்டார மொழி வழக்குல பேசுனா ஏதும் தப்பா நினைப்பாங்கலோன்னு அவங்க ஊர் பாஷையில பேசாம, வந்து சேர்ந்திருக்குற பிரதேசத்து தமிழல பேச நினைக்கும்போது பிரச்சனை தொடங்குது. சிலருக்கு இப்படி வேற ஊர்காரன் நம்ம கிண்டல் அடிக்கிறான்னு தப்ப நினைக்க வாய்ப்பிருக்கு( இது நான் கண்ட உண்மை). இங்க தான் அவன் சில பொதுவான வார்த்தைகளுக்காக ஆங்கிலத்த நுழைக்கிறான். (சில அத்யாவசியமான வெளிநாட்டு கண்டுபிடிப்புகளுக்கு ஆங்கிலத்துல சொல்றதே உசிதம்).அது அப்டியே காலபோக்கில எது சரியான தமிழ வார்த்தைந்குறதே மறக்குற அளவுக்கு ஆயிடுது.( ஆதித்யா நகைச்சுவை அலைவரிசைல, போற சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சிய பார்த்தா புரியும்,இது எவ்வளவு பிரச்சனையிருக்குன்னு).ஆங்கிலம் மட்டுமிலாம, சிங்களம் (புடுவ என்னும் சிங்கள சொல் புடுவம் ஆனது( நாற்காலி),மலையாளம், சமஸ்கிருதம்னு எல்லாம் கலந்தே இருக்கு.


நான் சொல்ல வர்றது இதுதான். நம்ம வட்டார மொழி வழக்குல பேச வெக்கபடாதிங்க.அவங்களுடைய ஊர் பாஷையில பேசுனா தான் மதிப்பாங்கன்னு தப்பு கணக்கு போடாதிங்க. எந்த மொழிவழக்கும் எதற்கும் குறைஞ்சது கிடையாது. மத்தவன் பேசும தமிழ கிண்டல் அடிக்காதீங்க. இது கடைசில நம்ம தலையில நாமே மண்ணை அள்ளி போட்டுகொள்றதுக்கு சமம்.


ஆங்கிலத்த கலந்து பேசுனா தான் மரியதைங்குறது முட்டாள்தனம். தமிழில அதற்கு ஈடாக எல்லோரும் பாவிக்கக்கூடிய எளிமையான வார்த்தை இல்லாதப்போ ஆங்கிலத்த பாவிங்க. அதுக்காக வெள்ளைகாரன் கண்டுபிடிக்கிறது எல்லாதையுமே தமிழுக்கு மாற்றி ஆகணும்னு நினைக்கிறதும் சாத்தியமில்லாத ஒரு விஷயம். ஆங்கிலத்துல பேசுனா அவன் அறிவாளி ஆகிடுவானா?


தமிழில இலக்கிய நூல்களில் வட்டார மொழிவழக்கு சம்பந்தமா பல நாவல்களை அடையாளம் காட்டலாம். சிறுகதைகள், நாவல்களில் எந்த பிரதேசத்தை களமா எடுத்திருக்காங்களோ அந்த மொழி வழக்கு அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனா அந்த உச்சரிப்பு, தொனி, சுருதி மாதிரியான விஷயம் எல்லாம் பேச பேச தான், நிலைச்சு நிக்கும்.( நாட்டார் பாடல் மாதிரி தான்)அடுத்த சந்ததி மொத்தமா தமிழ மறக்குறதுக்கு முன்னாடியே இப்படியான ஒரு விழிப்புணர்வு நம்ம மனசுல இருக்கணும். இதுதான் என்னுடய தாழ்மையான கருத்து.